'தி கோட்' படம் : முதலில் உருவாக்கிய விஜய்யின் இளம் வயது ஏஐ தோற்றம் வைரல்
|'தி கோட்' படத்தில் விஜய் மகன் மற்றும் அப்பா என்ற இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சென்னை,
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்ட பொருட் செலவில் உருவான திரைப்படம் 'தி கோட்'. பெரும் எதிர்பார்ப்புகளுடன் கடந்த 5-ம் தேதி வெளியாகி வெற்றி நடைபோட்டு வருகிறது. இதில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் விஜய் மகன் மற்றும் அப்பா என்ற இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் டிஏஜிங் தொழில்நுட்பம் மூலம் விஜய் இளம் வயதில் தோன்றும் காட்சிகள் பெரியளவில் கவனம் ஈர்த்துள்ளன. மேலும், திரிஷா, சிவகார்த்திகேயன் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.
இந்த படத்தில் ஜீவன் என்ற கதாபாத்திரத்தில் தோன்றும் விஜய்யின் தோற்றம் மற்றும் நடிப்பு ஆகியவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு நிகழ்ச்சி ஒன்றில் ஜீவன் என்ற கதாபாத்திரத்திற்காக விஜய்க்கு முதலில் வேறொரு தோற்றம் உருவாக்கப்பட்டது என்று கூறினார். பின்னர் அந்த புகைப்படத்தையும் காண்பித்தார். தற்போது அந்த ஏஐ புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.