இந்த சாதனையை செய்த முதல் இந்திய படம் - வரலாறு படைத்த 'கேம் சேஞ்சர்'
|'கேம் சேஞ்சர்' படம் பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வருகிறது.
சென்னை,
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார்.
கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் ஊழல் அமைப்புக்கு எதிராக போராடி நீதியை நிலைநாட்டும் ஐஏஎஸ் அதிகாரியாக ராம் சரண் நடித்துள்ளார்.
கேம் சேஞ்சர் படம் பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், பிரமாண்ட சாதனை ஒன்றை 'கேம் சேஞ்சர்' படம் படைத்துள்ளது. அதன்படி, அமெரிக்காவில் இப்படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி அடுத்த மாதம் 21-ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இதற்கு முன்பு எந்த இந்திய படமும் அமெரிக்காவில் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நடத்தியதில்லை என்பதால், அந்த வரலாறை படைக்க போகும் முதல் இந்திய படமாக 'கேம் சேஞ்சர்' உள்ளது.