< Back
சினிமா செய்திகள்
தங்கலான் திரைப்படம்  சமூகத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது - இயக்குனர் பா.ரஞ்சித்
சினிமா செய்திகள்

தங்கலான் திரைப்படம் சமூகத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது - இயக்குனர் பா.ரஞ்சித்

தினத்தந்தி
|
20 Aug 2024 5:17 AM IST

தங்கலான் திரைப்படத்தின் வெற்றி எனக்கு மிகப்பெரிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது என்று இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

சென்னை,

பா.ரஞ்சித் - விக்ரம் கூட்டணியில் உருவான திரைப்படம் தங்கலான். ஞானவேல் ராஜா தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கடந்த சுதந்திர தினத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களுடன் நல்ல வரவேற்பை பெற்று, ரூ.53 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. அதில் விக்ரம், பா.ரஞ்சித் மற்றும் படக்குழுவினர் பலர் பங்கேற்றனர்.

அப்போது பா.ரஞ்சித் பேசுகையில், "தங்கலான் திரைப்படம் முக்கியமான விவாதத்தை தமிழ் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளது சந்தோஷமாக இருக்கிறது. எனக்குள் இருப்பதை திரைக்கதையின் வாயிலாக மக்களிடன் நான் பேச நினைக்கும் வேட்கைதான் தங்கலான் படம். அதை சரியாக புரிந்துகொண்டு கொண்டாடுகிற எண்ணிக்கையில் அடங்காத நிறைய மக்கள், எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் இந்த படம் குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதை பார்க்கும்போது நான் சரியான படத்தைத்தான் எடுத்துள்ளேன் என்று மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்த படத்தில் வேலை செய்தவர்கள் கடுமையான உழைப்பை கொடுத்துள்ளனர். என்னுடைய படைப்பின் மீதும், என் மீதும் தீராத காதல் உள்ளவர்கள் மட்டும்தான் எனக்காக இந்த அளவிற்கு வேலை செய்ய முடியும். இது எனக்கு தொடர்ந்து உழைக்க வேண்டும் என்ற பெரிய பொறுப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் தரும் அன்புதான் எனக்கு உந்துதலாக இருக்கிறது.

இப்படத்தின் வெற்றி எனக்கு மிகப்பெரிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. இன்னும் பல காலங்கள் கடந்தாலும் இப்படம் பொக்கிஷமாகக் கருதப்படும். அதற்கான வேலைப்பாடுகள் இந்தப் படத்தில் இருப்பதை பார்க்க முடிகிறது. நிறைய நடிகர்கள் அவர்களுக்கு ஏற்ற சூழலில் நடிக்கும்போது இந்த அளவிற்கு உழைத்து இந்த படத்தில் விக்ரம் நடித்திருப்பது, அவர் கலையின் மீதும் ரசிகர்கள் மீதும் வைத்துள்ள அன்புதான். அது தீராத போராட்ட குணமுடையதாக உள்ளது. பல பரிமாணங்களுடைய கதாபாத்திரங்களை தேடித் தேடி நடிக்கக் கூடிய ஒரு நடிகராக விக்ரம் இருக்கிறார். அதனால் அவருக்குத் தீனி போடுவது சவாலான ஒன்று. ஆனால் தங்கலான் படம் அவருக்கு ஈடுசெய்யக்கூடிய தீனியாக அமைந்ததில் மகிழ்ச்சி. இந்த மாதிரியான நடிகருடன் நான் வேலை செய்தது எனக்கு சாவாலான மற்றும் மகிழ்ச்சியான விஷயம்" என்றார்.

மேலும் செய்திகள்