பாரதிராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்ற 'லப்பர் பந்து' படக்குழு
|'லப்பர் பந்து' படக்குழுவினர் இயக்குனர் பாரதிராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
சென்னை,
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'லப்பர் பந்து'. இவர் 'கனா, எப்.ஐ.ஆர்' படங்களில் இணை இயக்குனர் மற்றும் 'நெஞ்சுக்கு நீதி' படத்திற்கு வசனம் எழுதியவர். இந்தப் படத்தில் ஸ்வாசிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, காளி வெங்கட், பால சரவணன், தேவ தர்ஷிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். கடந்த மாதம் 27-ந் தேதி வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தாண்டின் சிறந்த படங்களில் ஒன்று என ரசிகர்களிடமிருந்து பாராட்டுகளும் கிடைத்துள்ளன. கிரிக்கெட்டை மையமாக வைத்து குடும்ப படமாகவும் இது உருவாகியுள்ளதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இந்த படத்தில் இளையராவின் இசையில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான 'பொன்மனச் செல்வன்' படத்தில் இடம் பெற்ற 'நீ பொட்டு வச்ச தங்க குடம்' என்ற பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாடத்தின் கதாநாயகனான அட்டக்கத்தி தினேஷ் விளையாடும் போது இந்த பாடல் ஒலிக்கப்பட்டது.
இந்தநிலையில், லப்பர் பந்து படக்குழுவினர் இயக்குனர் இமயம் பாரதிராஜாவை சந்தித்தனர். இந்த படத்திற்காக தனது உயர்ந்த பாராட்டுகளைப் பகிர்ந்து கொண்டார், மேலும் ஒட்டுமொத்த படக்குழுவையும் பாராட்டினார் பாரதிராஜா. இது குறித்த பதிவை தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.