'சூர்யா 44' ரிலீஸ் குறித்து அப்டேட் கொடுத்த படக்குழு
|கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள சூர்யாவின் 44-வது படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.
சென்னை,
நடிகர் சூர்யாவின் 44-வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார் . சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகி வருகிறது. சூர்யா இத்திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் கடந்த ஜூன் மாதம் துவங்கியது. இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் நடைபெற்றது. படப்பிடிப்பு முடிந்து கையோடு தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் டைட்டில் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என கூறப்பட்டது. தற்போது கிடைத்த தகவலின்படி, சூர்யா 44 திரைப்படத்தை 2025 மார்ச் மாதம் வெளியிடுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.