'மஞ்சுமெல் பாய்ஸ்' பட இயக்குனரின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது
|'மஞ்சுமெல் பாய்ஸ்' பட இயக்குனர் சிதம்பரம் இயக்கும் புதிய படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
சென்னை,
சிதம்பரம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் 'மஞ்சுமெல் பாய்ஸ்'. இப்படத்தில் சவுபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி வெளியான இப்படம் கேரளாவை விட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று அதிக வசூலைக் குவித்தது. இப்படம் தமிழ் நாட்டில் மட்டுமே ரூ.60 கோடி வசூல் செய்துள்ளது.
இதற்கிடையில் இயக்குனர் சிதம்பரம், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், தற்போது சிதம்பரம் இயக்கவுள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது சிதம்பரம் அடுத்ததாக மலையாளத்திலேயே மற்றொரு புதிய படத்தை இயக்க உள்ளார்.
இப்படத்தை விஜய்யின் 'தளபதி 69', யாஷின் 'டாக்ஸிக்' ஆகிய படங்களை தயாரித்து வரும் கேவிஎன் நிறுவனம் இந்த படத்தையும் தயாரிக்க உள்ளது. மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் ஷைஜு காலித், இசையமைப்பாளர் சுஷின் ஷியாம், கலை இயக்குனர் அஜயன் சல்லிசேரி ஆகியோர் இப்படத்தில் பணியாற்ற உள்ளனர்.
இந்த படத்திற்கு 'ஆவேசம்' பட இயக்குனர் ஜித்து மாதவன் கதை எழுதுகிறார். இது குறித்த பதிவை கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும் இப்படம் இந்த ஆண்டிலேயே வெளியாகும் என்றும் பதிவிட்டுள்ளது. விரைவில் இப்படம் தொடர்பான அடுத்தடுத்த அப்பேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.