முதல் படத்தை விட 2-வது படம் முக்கியம் என்று கூறிய இளம் நடிகை - ஏன் தெரியுமா?
|முதல் படத்திலிருந்து தான் பெற்ற அனுபவத்தை அம்ருதா பகிர்ந்திருக்கிறார்.
சென்னை,
கடந்த ஆண்டு அறிமுக இயக்குனர் உமேஷ் கே. கிருபா இயக்கத்தில் வெளியான கன்னட மொழி திரைப்படமான 'டகரு பால்யா' மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அம்ருதா பிரேம். இப்படத்தில் இவருடன், நாகபூஷனா, தாரா, சரத் லோஹிதாஸ்வா மற்றும் ரங்காயண ரகு ஆகியோர் நடித்திருந்தனர்.
இப்படத்தை தொடர்ந்து, தற்போது நடிகை அம்ருதா பிரேம் தனது இரண்டாவது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்நிலையில், தனது முதல் படத்திலிருந்து தான் பெற்ற அனுபவத்தை அம்ருதா பகிர்ந்திருக்கிறார். அவர் கூறுகையில்,
'முதல் படத்தில் எல்லா அறிமுக நடிகர், நடிகைகளுக்கும் ஒரு பயம் இருக்கும். இதனால், நமக்கு நம்பிக்கை குறைவாக இருக்கும். அப்போது, சோதனைகள் மற்றும் தவறுகளை சந்திப்போம். இது நமக்கு சிலவற்றை கற்றுக்கொடுக்கும்.
முதல் படத்துக்குக் கிடைத்த அன்பையும் வரவேற்பையும் நான் எதிர்பார்க்கவில்லை. அது எனக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. இப்போது எனது எல்லையை விரிவுப்படுத்தவும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கவும் விரும்புகிறேன்
இரண்டாவது படம் என்பது முக்கியமான ஒன்று. ஏனென்றால், முந்தைய படத்திலிருந்து நாம் கற்றுக்கொண்டதை பயன்படுத்த அது மிகச்சிறந்த வாய்ப்பு. மக்கள் இப்போது என்னை ஒரு நல்ல கதையுடன் வருபவள் என்று நினைக்கிறார்கள்.
என் மீது வைத்துள்ள அந்த நம்பிக்கையை நான் தொடர வேண்டும். என்னை முழு மனதுடன் ஏற்றுக்கொண்ட பார்வையாளர்களை நான் ஏமாற்ற விரும்பவில்லை. இதனால், எனது அடுத்த படத்தை ஒப்பந்தம் செய்ய நேரம் எடுத்து கொண்டேன். இரண்டாவது படத்தில், எனது கதாபாத்திரத்தை விட ஸ்கிரிப்ட்தான் மிகவும் பிடித்திருந்தது,' என்றார்.