அதான் துப்பாக்கிய கையில வாங்கிட்டாருல….. சிவகார்த்திகேயன் குறித்து லோகேஷ் கனகராஜ்!
|விரைவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், சிவகார்த்திகேயன் கூட்டணியில் புதிய படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை,
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
'அமரன்' திரைப்படம் வருகிற 31-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடி வீர மரணமடைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் கதையை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியான நிலையில் தற்போது அடுத்தடுத்த பாடல்களையும் படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை வெளியான முதல் இரண்டு பாடல்களுமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி, சாய் பல்லவி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் இயக்குனர்கள் மணிரத்னம் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அப்போது லோகேஷ் கனகராஜிடம், "உங்களது படங்களில் எல்லாரையும் டானாக நடிக்க வைப்பீர்கள். எப்போது எங்கள் டானை வைத்து படம் பண்ண போகிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு லோகேஷ் கனகராஜ், "இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சீக்கிரமே அது நடக்கும். அதான் துப்பாக்கிய கையில வாங்கிட்டாருல" என்று சொன்னதும் கரகோஷமும் விசில் சத்தமும் விண்ணை பிளந்தது.
எனவே விரைவில் லோகேஷ் கனகராஜ், சிவகார்த்திகேயன் கூட்டணியில் புதிய படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.