ஆவணப்படத்திற்கு தடையில்லா சான்று வழங்கியவர்களுக்கு நன்றி - நடிகை நயன்தாரா
|தனது ஆவணப்படத்திற்க்கு தடையில்லா சான்று வழங்கிய பேரன்புக்கு நன்றி தெரிவித்து நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை,
தென்னிந்திய சினிமாவின் முன்னனி நடிகை நயன்தாரா. இவரும், பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து கடந்த 2022-ம் ஆண்டு மாமல்லபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமண வீடியோ மற்றும் நயன்தாரா சிறுவயது வாழ்க்கை முதல், முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது வரை உள்ள சம்பவங்கள் அனைத்தும் ஆவணப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதில் நயன்தாராவின் பேட்டியும், அவர் படப்பிடிப்பில் பங்கேற்கும் காட்சிகள், மேக்கப் போடுவது, விக்னேஷ் சிவனுடன் ஏற்பட்ட காதல் உள்ளிட்ட பல விசயங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த ஆவணப்படமாக நெட்பிளிக்ஸ் தளத்தில் கடந்த 18-ந் வெளியானது.
இந்த நிலையில், தனது ஆவணப்படத்துக்கு தடையில்லா சான்று வழங்கிய பேரன்புக்கு நன்றி என்று நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் 'நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்' ஆவணப்படம் வெளியாகி இருக்கிறது. பல்வேறு மகிழ்வான தருணங்கள் அடங்கிய எனது திரைப் பயணத்தில் நாம் இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள் மிகவும் இன்றியமையாதது. அதனால் அந்த படங்கள் குறித்த நினைவுகளும் ஆவணப்படத்தில் இடம்பெற வேண்டும் என உங்களை அணுகிய போது எந்தவித தயக்கமோ, தாமதமோ இல்லாமல் தடையில்லா சான்றிதழ் வழங்கிய அந்த பேரன்பை என்றேன்றும் நன்றியோடு நினைவில் வைத்துக் கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில் பாலிவுட்டில் ஷாருக்கான் மற்றும் அவரது மனைவிக்கும், தமிழ் சினிமாவில் உதயநிதி ஸ்டாலின், அர்ச்சனா கல்பாத்தி, ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களுக்கும், தெலுங்கு சினிமாவை சேர்ந்து சிரஞ்சீவி, ராம் சரண், சிவபிரசாத் ரெட்டி மற்றும் மலையாள சினிமாவை சேர்ந்த விந்தியன், மகா சுபைர், உள்ளிட்ட பலருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். நம் பயணம் இதே போல் என்றென்றும் தொடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை இந்த ஆவணப்படத்தில் பயன்படுத்த நடிகர் தனுஷ் அனுமதி வழங்காததால், நன்றி தெரிவித்து நயன்தாரா வெளியிட்ட பட்டியலில் தனுஷின் பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.