'தங்கலான்' படத்தின் புரோமோஷன் பணிகள் ஆரம்பம்!
|'தங்கலான்' திரைப்படத்தின் புரோமோஷன் பணிகளைப் படக்குழு தொடங்கியுள்ளது.
சென்னை,
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
இந்த படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்க வயல் குறித்த கதை என்று இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்திருந்தார். கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் படும் அவதியை மையமாக வைத்து எமோஷனல் கலந்த கதைக்களத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விக்ரமின் தோற்றம் மற்றும் மிரட்டலான நடிப்பு உள்ளிட்டவை ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்றது. 'தங்கலான்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'மினிக்கி மினிக்கி' பாடல் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தங்கலான் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 15-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் திரையிடப்படும் என படக்குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை படக்குழுவினர் தங்களின் எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். மேலும் படக்குழுவினர் இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல், பல நாடுகளுக்கு சென்று தங்கலான் திரைப்படத்தை புரோமோஷன் செய்ய இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 2 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.