
'நாக சைதன்யாவின் கெரியரில் அதிக வசூல் செய்த படமாக 'தண்டேல்' இருக்கும்' - பிரபல தயாரிப்பாளர்

'தண்டேல்’ படம் அடுத்த மாதம் 7-ம் தேதி வெளியாக உள்ளது.
சென்னை,
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. இவரது நடிப்பில் வெளியாக உள்ள படம் 'தண்டேல்'. இதில், சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். 'கார்த்திகேயா 2' திரைப்படத்தின் மூலம் பிரபலமான சந்து மொண்டேட்டி இப்படத்தை இயக்கியுள்ளார்.
கீதா ஆர்ட்ஸ் சார்பில் பன்னிவாஸ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஸ்ரீகாகுளத்தில் உள்ள மீனவர்களின் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது. இப்படம் அடுத்த மாதம் 7-ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், நாக சைதன்யாவின் கெரியரில் சிறந்த படமாக தண்டேல் இருக்கும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,
"தண்டேலில் தனது சிறந்த நடிப்பை வெளிகாட்டி உள்ளார் நாக சைதன்யா. தண்டேல் அவரது சினிமா கெரியரில் சிறந்த படமாகவும் அதிக வசூல் செய்த படமாகவும் இருக்கும். அதற்கு நான் உறுதியளிக்கிறேன்' என்றார்.