ஜேசன் சஞ்சய் படத்திற்கு இசையமைக்கும் தமன்!
|விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவரது மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் உள்ள டொராண்டோ பிலிம் ஸ்கூலில் திரைப்படத் தயாரிப்பு டிப்ளமோ படித்தார். தொடர்ந்து லண்டனில் திரைக்கதை எழுதுவது தொடர்பான பி.ஏ. ஹானர்ஸ் படிப்பை முடித்தார். இவர் சில குறும்படங்களை இயக்கியுள்ளார். இந்த நிலையில் லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தை ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ளதாக தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த படத்தில் கதாநாயகனாக சந்தீப் கிஷன் நடிக்க உள்ளார். இவர் மாநகரம், மைக்கெல், ராயன் படங்களில் நடித்து கவனம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் இப்படத்திற்கு இசையமைக்க முதலில் அனிருத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது அவருக்கு பதிலாக விஜய்யின் 'வாரிசு' படத்திற்கு இசையமைத்த தமன் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க உள்ளதாகவும், இப்படம் குறித்த அப்டேட்டுகள் டிசம்பர் மாதம் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.