< Back
சினிமா செய்திகள்
அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் - தெலுங்கானா ஐகோர்ட்டு உத்தரவு
சினிமா செய்திகள்

அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் - தெலுங்கானா ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
13 Dec 2024 5:48 PM IST

கைது செய்யப்பட்டுள்ள அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி தெலுங்கானா கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஐதராபாத்,

புஷ்பா 2 பட நடிகர் அல்லு அர்ஜுன். இவர் கடந்த 4ம் தேதி இரவு ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டருக்கு இரவு 10.30 மணிக்கு திரையிடப்பட்ட புஷ்பா 2 படத்தை பார்க்க சென்றார். அவருடம் நடிகை ராஷ்மிகா மந்தனா உள்பட பலரும் சந்தியா தியேட்டருக்கு வந்தனர்.

இதனால், தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது, குடும்பத்துடன் புஷ்பா 2 படம் பார்க்க வந்த ரேவதி (வயது 35) என்ற பெண், அவரது மகன் ஸ்ரீதேஜா (வயது 9) ஆகிய இருவரும் கூட்ட நெரிசலில் சிக்கி நிலை தடுமாறி கிழே விழுந்தனர்.

அப்போது, ரசிகர்கள் பலர் இருவர் மீதும் ஏறி மிதித்தனர். இதனால், இருவரும் மூச்சுப்பேச்சின்றி சுயநினைவு இழந்தனர். இதையடுத்து, இருவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சிறுவன் ஸ்ரீதேஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரது தாயாரான ரேவதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தைய நிலையில் ரேவதி உயிரிழந்த சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதேவேளை, தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் அல்லு அர்ஜுன் தெலுங்கானா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதனிடையே, ரேவதி உயிரிழப்பு சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜுனை போலீசார் இன்று கைது செய்தனர்.

சிக்கட்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செய்யப்பட்ட அல்லு அர்ஜுன் பின்னர் நம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அப்போது, விசாரணை மேற்கொண்ட கோர்ட்டு, அல்லு அர்ஜுனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டது.

இதனிடையே, தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி அல்லு அர்ஜுனா தெலுங்கானா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி தெலுங்கானா ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதன் மூலம் அல்லு அர்ஜுனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கும்படி நம்பள்ளி கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐகோர்ட்டு இடைக்கால ஜாமீன் வழங்கியதையடுத்து கைது செய்யப்பட்டுள்ள அல்லு அர்ஜுன் இன்றே விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்