< Back
சினிமா செய்திகள்
தி கோட் திரைப்படத்தால் ஆந்திரா மற்றும் தெலங்கானா விநியோகஸ்தர்களுக்கு ரூ.13 கோடி நஷ்டம்!
சினிமா செய்திகள்

'தி கோட்' திரைப்படத்தால் ஆந்திரா மற்றும் தெலங்கானா விநியோகஸ்தர்களுக்கு ரூ.13 கோடி நஷ்டம்!

தினத்தந்தி
|
13 Sept 2024 3:18 PM IST

விஜய்யின் 'தி கோட்' திரைப்படத்தால் ஆந்திரா மற்றும் தெலங்கானா விநியோகஸ்தர்களுக்கு ரூ 13 கோடி நஷ்டம் ஏற்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்ட பொருட் செலவில் உருவான திரைப்படம் தி கோட். பெரும் எதிர்பார்ப்புகளுடன் கடந்த செப்டம்பர் 5 அன்று வெளியான இந்த திரைப்படம், முதல் நாளிலேயே உலகம் முழுவதும் 126 கோடி ரூபாய் வசூலித்தது. அதைதொடர்ந்து, இரண்டாவது நாளில் இந்தியாவில் சுமார் 25 கோடி ரூபாய் என்ற அளவிற்கு வசூல் குறைந்தது. இருப்பினும், பொது விடுமுறையான கடந்த இரண்டு நாட்களிலும் தி கோட் படத்தின் வசூல் மீண்டும் அதிகரித்தது. இதனால், முதல் நான்கு நாட்களிலேயே தி கோட் படம் உலகளவில் 288 கோடி வசூலித்தது. சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் தமிழ் , தெலுங்கு , மலையாளம் , இந்தி , கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது. தமிழைப் போலவே பிற மொழிகளிலும் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

முதல் நான்கு நாட்கள் சக்கைப்போடு போட்டு 'தி கோட்' அடுத்தடுத்த நாட்களில் வசூல் ரீதியாக சரிவை சந்தித்து வருகிறது. 1000 கோடி 1500 கோடி என படக்குழுவினர் படத்திற்கு பெரியளவில் புரோமோஷன் செய்தார்கள். ஆனால் ஒருவார காலம் ஆகியும் படம் 318 கோடி மட்டுமே வசூலித்துள்ளது ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் படத்திற்கு திரையரங்குகளில் கூட்டம் இருந்து வந்தாலும் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு குறைந்துள்ளது. விஜய் நடித்த முந்தைய படமான லியோ தெலுங்கு டப்பிங்கில் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இதனால்'தி கோட்' படத்தை பெரும் தொகை கொடுத்து விநியோகஸ்தர்கள் வாங்கினார்கள். 'தி கோட்' படத்தின் தெலுங்கு மொழி ரிலீஸ் உரிமம் மொத்தம் 16 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது.

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் முதல் சில நாட்களில் 2.5 கோடி வசூலித்த 'தி கோட்' அடுத்தடுத்த நாட்களில் சரிவை சந்தித்தது. இதனால் 'தி கோட்' படத்தின் ஆந்திரா மற்றும் தெலங்கானா விநியோகஸ்தர்களுக்கு 13 கோடி நஷ்டம் ஏற்பட இருப்பதாக சினிமா ஆர்வலர்கள் கணித்துள்ளார்கள். தெலுங்கு ரசிகர்களிடையே விஜய் படங்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற போதும் தி கோட் படம் சரிவை சந்தித்து வருவது ஆச்சரியமளிக்கிறது.

மேலும் செய்திகள்