இந்தியில் ரீமேக்காகும் தமிழ் படம் - கதாநாயகியாக ஜான்வி கபூர்?
|ஜான்வி கபூர் கடைசியாக ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான 'தேவரா' படத்தில் நடித்திருந்தார்.
சென்னை,
இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் தமிழில் கடந்த 2009ம் ஆண்டு வெளியான படம் 'ஈரம்'. இப்படத்தை அறிவழகன் இயக்க, ஆதி, நந்தா, சிந்து மேனன், சரண்யா மோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் இதுவரை வேறு எந்த மொழியிலும் ரீமேக் செய்யப்படாதநிலையில், தற்போது இந்தியில் ரீமேக்காக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கிட்டத்தட்ட 15 வருடங்களுக்குப் பிறகு தற்போது 'ஈரம்' படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர்தான் 'ஈரம்' படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இதில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும் கதையில் சிறிய மாற்றம் செய்து பிரமாண்டமாக இப்படம் உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜான்வி கபூர் கடைசியாக ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான 'தேவரா' படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது.