'இவரைப்போன்று இருப்பதால்தான் பாலிவுட்டில்.. '- டாப்சி பகிர்ந்த நெகிழ்ச்சி தகவல்
|பாலிவுட்டில் அறிமுகமானது எப்படி என்பதை ஷிகர் தவானுடன் நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்துகொண்டபோது நடிகை டாப்சி பகிர்ந்தார்.
மும்பை,
தமிழில் 'ஆடுகளம்' படத்தில் அறிமுகமாகி பிரபல கதாநாயகியாக உயர்ந்த டாப்சி இந்தியில் தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
டாப்சியின் படங்கள் நல்ல வசூல் பார்த்து வருவதால் பாலிவுட்டில் முன்னணி கதாநாயகிகளுக்கு இணையாக உயர்ந்து இருக்கிறார். வெளிநாட்டை சேர்ந்த பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போவை காதலித்து கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், பாலிவுட்டில் அறிமுகமானது எப்படி என்பதை ஷிகர் தவானுடன் நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்துகொண்டபோது பகிர்ந்தார். அவர் பேசியதாவது,
நான் கல்லூரியில் படிக்கும்போதே எனக்கு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. அதன் பிறகு சில வருடங்களில் பாலிவுட்டிலும் படங்கள் வர ஆரம்பித்தன. என்னை பிரீத்தி ஜிந்தாவின் புதிய பதிப்பு என்பார்கள். இதனால்தான் பாலிவுட்டில் படங்கள் வந்தன. அவரிடம் நேர்மறையான எண்ணங்கள் அதிகம். அது என்னைவிட உங்களுக்கு (ஷிகர் தவான்) நன்றாக தெரியும். ஏனென்றால், என்னைவிட அவருடன் அதிகமாக நீங்கள் இருந்துள்ளீர்கள். நான் அவரை தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்திருக்கிறேன்.
பிரீத்தி ஜிந்தா எப்போதும் கலகலப்புடன் இருப்பவர் என்று நினைக்கிறேன். அவரைப்போல இருக்க எப்போதும் நான் முயற்சி செய்வேன். இவ்வாறு நெகிழ்ச்சியான தகவலை பகிர்ந்துள்ளார்.