மூன்று பாகங்களாக உருவாகும் சூர்யாவின் 'வாடிவாசல்' படம்
|வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் சென்னையில் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை,
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி மற்றும் சூரி நடிப்பில் கடந்த 20-ந் தேதி 'விடுதலை 2' படம் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதற்கிடையில் இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் சூர்யாவை வைத்து 'வாடிவாசல்' என்ற படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிய உள்ளனர். ஆனால் படப்பிடிப்பு பணிகள் தொடங்காமல் தாமதமாகி கொண்ட போகின்றன.
தற்போது நடிகர் சூர்யா ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணி கோவையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர் சூர்யா 'வாடிவாசல்' படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
அதன்படி, வாடிவாசல் திரைப்படத்தின் பணிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னையில் துவங்க உள்ளதாகவும், படத்திற்கான அனிமேஷன் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது 'வாடிவாசல்' படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
அதாவது, இப்படத்தை மூன்று பாகங்களாக இயக்க வெற்றிமாறன் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்திற்கான பிரீ புரொடக்சன் பணிகளும் தொடங்கப்பட்டு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.