ஏ.ஆர்.ரகுமான் விலகல் - 'சூர்யா 45' படத்தின் புதிய இசையமைப்பாளர் அறிவிப்பு
|சூர்யா 45 படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியானபோதே ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
சென்னை,
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, கங்குவா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படங்களை தொடர்ந்து தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் 'சூர்யா 45' படத்தில் நடித்து வருகிறார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார்.
சூர்யாவும் திரிஷாவும் இணைந்து மவுனம் பேசியதே, ஆறு ஆகிய படங்களில் நடித்துள்ளனர். தற்போது 19 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு இருவரும் மீண்டும் இணைந்து நடிப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
இப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியானபோதே ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது ஏ.ஆர்.ரகுமான் விலகியுள்ளநிலையில், புதிய இசையமைப்பாளரை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, 'சூர்யா 45' படத்திற்கு கட்சி சேர, ஆச கூட ஆல்பம் பாடல் பிரபலம் சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார்.
சாய் அபயங்கர், லோகேஷ் கனகராஜின் சினிமா யுனிவெர்ஸின் கீழ் உருவாகி வரும் பென்ஸ் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இது இவர் சினிமாவில் இசையமைக்கும் முதல் படமாகும். தற்போது பென்ஸ் படத்தை தொடந்து 'சூர்யா 45'-க்கும் சாய் அபயங்கர் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.