சிறிய திரைப்படங்கள் வெற்றி பெறுவது திரைத்துறையை மேலும் ஊக்குவிக்கும் - நடிகர் விமல்
|`சார்' திரைப்படம் வெற்றியடைந்தது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற சிறிய திரைப்படங்கள் வெற்றி பெறுவது திரைத்துறையை மேலும் ஊக்குவிக்கும் என்று நடிகர் விமல் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விமல். இவர் தற்போது 'சார்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை 'கன்னி மாடம்' என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான போஸ் வெங்கட் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் விமல் உடன் இணைந்து சரவணன், விஜய் முருகன், ஆடுகளம் ஜெயபாலன், நடிகை ரமா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் சாயா கண்ணன் என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் நிறுவனம் வெளியிடுகிறது. முதலில் மா.பொ.சி (மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்) என தலைப்பிடப்பட்ட இப்படம் தற்பொழுது "சார்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இப்படம் கடந்த 18-ம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படத்தை திரைப்பிரபலங்கள் பார்த்து அவர்களது கருத்தை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஒளிப்பதிவாளர் நட்டி, மைம் கோபி, ரியோ, இயக்குனர் தமிழ், விஜய் சேதுபதி, சீமான் அவர்களது பாராட்டை பதிவிட்டனர்.
'சார்' திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக திருப்பூர் ஸ்ரீ சக்தி திரையரங்கிற்கு வந்த நடிகர் விமல், இயக்குனர் போஸ் வெங்கட் உள்ளிட்ட படக் குழுவினர் ரசிகர்களுடன் அமர்ந்து திரைப்படத்தை கண்டுகளித்தனர்.
பின்னர் கேக் வெட்டி படத்தின் வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர். இதனைத்தொடர்ந்து நடிகர் விமல் கூறியதாவது:- `சார்' திரைப்படம் வெற்றியடைந்தது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற சிறிய திரைப்படங்கள் வெற்றி பெறுவது திரைத்துறையை மேலும் ஊக்குவிக்கும். ஓடிடி, திரையரங்கு என்பவை வெவ்வேறானவை. இரண்டும் திரைத்துறைக்கு மிகுந்த ஊக்கத்தை வழங்குகிறது. திரையரங்குகள் மூலம் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களின் ஆதரவுகளை பெற்று கொண்டாட்டத்தை ஏற்படுத்துகிறது.விஜய் மாநாட்டிற்கு விஷால் செல்வேன் என கூறியது வரவேற்கத்தக்க விஷயம். எனக்கு அந்த நேரத்தில் படப்பிடிப்பு இருக்கும் காரணத்தால் மாநாட்டில் கலந்து கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
இயக்குனர் போஸ் வெங்கட் கூறுகையில், `சிறிய திரைப்படங்கள் வெற்றி பெற நாட்கள் தேவைப்படுகிறது. ஆனால் முதல் 3 நாட்கள் மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது. அதற்கு அடுத்த நாட்கள் திரையரங்குகளால் பொறுமை காக்க முடியாத நிலையில் நல்ல படங்களும் திரையரங்கை விட்டு வெளியேறுகிறது. ஆனால் லப்பர் பந்து, சார் ஆகிய படங்களுக்கு பொதுமக்கள் அளித்த வரவேற்பு மகிழ்ச்சியை தருகிறது. வார இறுதி நாட்கள் தவிர்த்து அடுத்தடுத்த நாட்களிலும் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று படம் வெற்றி அடைந்திருக்கிறது. பொது மக்களின் நல்ல விமர்சனம் காரணமாக படம் வெற்றி அடைந்திருக்கிறது' என்றார்.