'ஜவான்' படத்தின் வசூல் சாதனையை முறியடித்த 'ஸ்த்ரீ 2'
|'ஸ்த்ரீ 2' திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 800 கோடி வரை வசூல் செய்துள்ளது.
மும்பை,
ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் அமர் கவுஷிக் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் 'ஸ்த்ரீ'. இந்த படத்தின் வெற்றியைத்தொடர்ந்து, இப்படத்தின் 2-ம் பாகம் உருவானது.
அதன்படி, 'ஸ்த்ரீ 2' கடந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இப்படத்தில் ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர் ஆகியோருடன் பங்கஜ் திரிபாதி, அபர்சக்தி குரானா மற்றும் அபிஷேக் பானர்ஜி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
நகைச்சுவை கலந்த திகில் கதைக்களத்தில் வெளிவந்த இப்படம் தற்போது பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வசூல் சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன் இந்தியில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் படைத்தது. அந்த வசூல் சாதனையை தற்போது 'ஸ்த்ரீ 2' முறியடித்துள்ளது.
அதாவது, ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் சுமார் ரூ.582 கோடி வசூலித்து முதல் இடத்தில் இருந்தது, தற்போது அந்த சாதனையை 'ஸ்த்ரீ 2' படம் ரூ.586 கோடி வசூலித்து முறியடித்துள்ளது. இப்படம் இதுவரை உலக அளவில் ரூ.800 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அக்சய் குமாரின் 'கேல் கேல் மெய்ன்' மற்றும் ஜான் ஆபிரகாமின் 'வேடா' படங்களுடன் மோதி, 'ஸ்த்ரீ 2' படம் இந்த வசூல் சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.