எஸ்.டி.ஆர் 49: விண்டேஜ் லுக்கில் மாஸ் காட்டும் சிம்பு - மேக்கிங் வீடியோ வெளியிட்ட படக்குழு
|விண்டேஜ் லுக் சிம்புவின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
சென்னை,
இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து கடந்த 2020ம் ஆண்டு அசோக் செல்வன், வாணி போஜன், ரித்திகா சிங் ஆகியோரின் நடிப்பில் வெளியான 'ஓ மை கடவுளே' எனும் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதைத் தொடர்ந்து இவர், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் 'டிராகன்' எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படமானது அடுத்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நடிகர் சிம்புவின் 49-வது படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இதனை இப்படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம், விண்டேஜ் லுக்கில் சிம்பு இருக்கும் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்தது. இந்நிலையில், விண்டேஜ் லுக் சிம்புவின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் சிம்பு ரசிகர்களுக்கு இது டிரீட்டாக அமைந்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கப் போகிறார் என்றும் மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என்றும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.