'சிம்பா': பாலகிருஷ்ணாவின் மகனுக்கு வில்லனாகும் முன்னணி தமிழ் நடிகரின் மகன்?
|'சிம்பா' படத்தில் பாலிவுட் நடிகை ரவீனா தாண்டனின் மகள் ராஷா ததானி கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை,
'ஹனுமான்' படம் ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ.400 கோடி வசூலித்தது. இந்தப் படத்தை இயக்கியவர் பிரசாந்த் வர்மா. இவரது அடுத்த படம் 'சிம்பா'. இந்தப் படத்தில் பாலகிருஷ்ணா மகன் மோக்சக்னா நடிகராக அறிமுகமாகிறார். ஹனுமான் சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தை, லெஜண்ட் புரொடக்சன் மற்றும் எஸ்எல்வி சினிமாஸ் தயாரிக்கிறது.
தற்போது, இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளை தேர்ந்தெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தில் மோக்சக்னாவுக்கு வில்லனாக முன்னணி தமிழ் நடிகரின் மகன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, நடிகர் விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரமிடம் 'சிம்பா' படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
மறுபுறம், மோக்சக்னாவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ரவீனா தாண்டனின் மகள் ராஷா ததானி நடிக்க இருப்பதாகவும் மோக்சக்னாவுக்கு அம்மாவாக பிரபல நடிகை ஷோபனா நடிப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.