'ரெட்ட தல' படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு!
|அருண் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ரெட்ட தல’ படத்திலிருந்து சிறப்பு போஸ்டர் வெளியாகி உள்ளது.
சென்னை,
1995-ல் வெளியான 'முறை மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் அருண் விஜய். கவுதம் மேனன் இயக்கிய 'என்னை அறிந்தால்' படத்தில் அஜித்துக்கு வில்லனாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். தொடர்ந்து அவர் நடித்த 'தடம்', 'குற்றம் 23', 'செக்கச் சிவந்த வானம்', 'மாபியா' ஆகிய படங்களின் வெற்றி, அருண் விஜய்க்கு திருப்பங்களாக அமைந்தன. இயக்குனர் பாலா இயக்கத்தில் 'வணங்கான்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
தற்போது, கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் தனது 36-வது படமான 'ரெட்ட தல' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிக்க சாம்.சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்தது. இந்த படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இவர் தடம் திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 'ரெட்ட தல' படத்தில் அருண் விஜய் 2 வேடங்களில் 4 வெவ்வேறு விதமான தோற்றத்தில் நடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் அருண் விஜய்யின் 47 வது பிறந்த நாளான இன்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் 'ரெட்ட தல' படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் நடிகர் அருண் விஜய், வித்தியாசமான லுக்கில் ஸ்டைலிஷாக காண்பிக்கப்பட்டுள்ளார். இந்த போஸ்டர் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.