தென்கொரியா: இளம் நடிகர் மாரடைப்பால் காலமானார்
|சீனாவில் சுற்றுப்பயணம் செய்வதற்கு முன்பு, பார்க்கிற்கு பெரிய அளவில் சுகாதார பாதிப்புகள் எதுவும் இருக்கவில்லை என அவருடைய நிறுவனம் தெரிவித்து உள்ளது.
சியோல்,
தென்கொரியா நாட்டை சேர்ந்த இளம் நடிகர் பார்க் மின் ஜே (வயது 32). சீனாவில் சுற்றுப்பயணம் செய்து வந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்து உள்ளார். இதுபற்றி தென்கொரியாவின் எக்ஸ்போர்ட்ஸ் நியூஸ் என்ற வலைதளம் வெளியிட்டு உள்ள செய்தியில், சீனாவில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, நவம்பர் 29-ந்தேதி மாரடைப்பால் பார்க் மின் ஜே காலமானார் என தெரிவித்து உள்ளது.
இந்த தகவலை அவருடைய பிக் டைட்டில் என்ற நிறுவனமும் உறுதி செய்துள்ளது. இதுபற்றி அதன் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட செய்தியில், நடிப்பை விரும்பிய அழகான ஒரு நடிகர் மற்றும் எப்போதும் சிறந்த முறையில் செயல்பட்ட பார்க் மின் ஜே சொர்க்கத்துக்கு சென்றிருக்கிறார் என தெரிவித்து உள்ளது.
அவருடைய நடிப்பை இனி நாம் காண முடியாது. ஆனால், அவரை பெருமையுடன் எப்போதும் நாம் நினைவுகூர்வோம் என்றும் தெரிவித்து உள்ளது. சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன்பு, அவருக்கு பெரிய அளவில் சுகாதார பாதிப்புகள் எதுவும் இருக்கவில்லை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.
அவர், மிஸ்டர் லீ (2021), லிட்டில் உமன் (2022), ஸ்னாப் அண்டு ஸ்பார்க் (2023 முதல் 2024 வரை) மற்றும் கொரியா-கீத்தன் வார் (2023 முதல் 2024 வரை) போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். பார்க்கின் இறுதி சடங்கு நாளை நடைபெற உள்ளது.