திருமணமான நடிகைகளை தென்னிந்திய திரையுலகம் ஒதுக்குகிறது - காஜல் அகர்வால்
|தமிழில் கமல்ஹாசனுடன் 'இந்தியன் 3' படத்தில் நடிகை காஜல் அகர்வால் நடித்துள்ளார்.
சென்னை,
காஜல் அகர்வால் திருமணத்துக்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் கமல்ஹாசனுடன் இந்தியன் 3 படத்திலும் தெலுங்கில் சத்யபாமா படத்திலும் நடித்து இருக்கிறார்.
இந்த நிலையில் காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டியில் ''இந்தி திரையுலகுக்கும் தென்னிந்திய பட உலகுக்கும் இடையே பாகுபாடு உள்ளது. இந்தியில் ஷர்மிளா தாகூர், ஹேமா மாலினி போன்றோர் திருமணத்துக்கு பிறகும் நடித்தனர்.இப்போதும் இந்தியில் திருமணமான தீபிகா படுகோனே, ஆலியாபட் ஆகியோருக்கு கிடைக்கும் கதாபாத்திரங்கள் தென்னிந்திய திரையுலகில் திருமணமான நடிகைகளுக்கு கிடைப்பது இல்லை.
இந்த விஷயத்தில் நயன்தாரா விதிவிலக்காக இருக்கிறார். அவருடைய படங்கள் தேர்வு எனக்கு பிடித்துள்ளது. திருமணமான நடிகைகளை தென்னிந்திய திரையுலகில் ஓரம்கட்டுகின்றனர். இந்த நிலைமையை விரைவில் மாற்றுவோம். இந்த தலைமுறை நடிகைகள் திருமணமாகி குழந்தை பெற்ற பிறகும் நடிக்க வருகிறார்கள்.
ரசிகர்களின் பார்வையும் மாறி இருக்கிறது. நல்ல கதையம்சம் உள்ள படங்களை அவர்கள் ரசிக்கிறார்கள். எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் முதன்மை கதாபாத்திரங்களிலும் நடிக்க முடியும்''என்றார்.