'சொர்க்கவாசல்' ஆர்.ஜே. பாலாஜிக்கு சிறந்த படமாக இருக்கும் - அனிருத்
|‘சொர்க்கவாசல்’ படத்தை பார்க்கும் போது எனக்கு பெருமையாக இருக்கிறது என்று இசையமைப்பாளர் அனிருத் கூறியுள்ளார்.
சென்னை,
"நானும் ரவுடிதான், எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், ரன் பேபி ரன், புகழ்" போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. ரேடியோ ஜாக்கியாக வாழ்க்கையை தொடங்கிய இவர் தற்போது படங்களில் நடிப்பதோடு கிரிக்கெட் போட்டிகளில் தனக்கே உரித்தான பாணியில் வர்ணனையாளராக இருந்து ரசிகர்களை வியப்பூட்டி வருகிறார். நயன்தாரா நடிப்பில் வெளிவந்த 'மூக்குத்தி அம்மன்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அவரே இயக்கி நடித்த 'சிங்கப்பூர் சலூன்' படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை இயக்குகிறார்.
இவர் தற்போது பா. ரஞ்சித்தின் உதவி இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் 'சொர்க்கவாசல்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியானது. ஸ்வீப் ரைட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் கதையை இயக்குனர் உடன் தமிழ்ப் பிரபா, அஸ்வின் ரவிச்சந்திரன் இணைந்து எழுதியுள்ளார்கள். மத்திய சிறைச்சாலையை மையமாக வைத்து 1999-ல் நடக்கும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. இதில், செல்வராகவன், கருணாஸ், பாலாஜி சக்திவேல், எழுத்தாளர் சோஷா சக்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரெய்லரை லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் ஆகியோர் வெளியிட்டனர்.
தென்னிந்திய திரை உலகில் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் அனிருத். இவர் ரஜினி, கமல் ,விஜய், அஜித் என பல ஸ்டார் நடிகர்களின் படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். அந்த வகையில் இவர் தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.
விழாவில் அனிருத் பேசுகையில், "படத்தின் இயக்குநர் விஸ்வநாத் என்னுடைய ஸ்கூல் ஜூனியர். அப்போது அவருக்கு சினிமாவில் ஆர்வம் இருப்பது தெரியாது. நான் சினிமாவில் பயணித்துக் கொண்டு இருக்கும் போது ஒரு நாள் டைரக்டர் ஆக வேண்டும் என சொன்னார். அப்புறம் அசிஸ்டண்டா சேர்ந்து ஒரு மூணு படங்கள் வேலை செஞ்சு, இந்த படத்தை எடுத்திருக்கிறார். இந்த படத்தின் கதையை சொன்ன போது, யார் நடித்தால் நல்லாயிருக்கும் என கேட்டார். என்னுடைய நண்பர் ஆர்.ஜே பாலாஜி இருந்தால் நல்லாயிருக்கும் என தோணுச்சு. இன்னைக்கு படம் பார்க்கும் போது பெருமையாக இருந்தது.
நான் இசையமைப்பாளராக ஆரம்பிக்கும் போது பாலாஜி எப்.எம்-மில் கொடி கட்டி பறந்தார். அதில் இருந்து எங்களுடைய கனெக்ஷன் ஆரம்பிச்சது. சினிமா துறையில் எனக்கு நண்பர்கள் கம்மிதான். அதில் எந்த பிரச்சனைக்கும் வந்து நிற்பது ஆர்.ஜே பாலாஜியும் ஒருவர். அவரிடம் எப்ப வேணாலும் சினிமாவை பற்றி பேசலாம். அவருக்கு ஒரு மாற்றத்தை இந்த படம் கொடுக்கும் என நம்புகிறேன். படத்தில் வேலை பார்த்த எல்லாருக்கும் சொர்க்கவாசலாக இந்தப் படம் இருக்கும் என வேண்டிக்கிறேன்" என்றார். பின்பு மேடையை விட்டு கீழே இறங்கிய அவர், திருப்பி மேடை ஏறி, "பதட்டத்துல ஒண்னு விட்டுட்டேன். செல்வா அண்ணா. அவர் இந்தப் படத்துக்கு ஒரு தூண் மாதிரி. என்னுடைய கரியரா இருக்கட்டும், என்னுடைய மியூசிக்கா இருக்கட்டும், அதில் முக்கிய பங்கு செல்வாராகவனுக்கு உண்டு" என்றார்.