இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் பிரபலங்கள்
|அடுத்த மாதம் 1ம் தேதி இந்தியன் 2 படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
சென்னை,
கமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் சங்கர் இயக்கி வருகிறார். பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த திரைப்படம், பின்னர் ஒரு சில காரணங்களால் தாமதமானது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
இத்திரைப்படம் வரும் ஜூலை மாதம் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. மேலும், அடுத்த மாதம் 1ம் தேதி இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்நிலையில், இதில் கலந்துகொள்ள உள்ள திரை பிரபலங்கள் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
அதன்படி, இதில் ரஜினிகாந்த், ராம்சரண் மட்டுமன்றி இயக்குனர் மணிரத்னம், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, இந்தி நடிகர் ரன்வீர் சிங், மலையாள நடிகர் மோகன் லால் உள்ளிட்ட நடிகர்களும் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான 'பாரா' வெளியாகி வைரலானது.