'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தின் 2ம் பாகம் அப்டேட்
|‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தின் 2ம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து இயக்குநர் டேனி பாய்ல் இயக்கிய படம், 'ஸ்லம்டாக் மில்லியனர்'. இந்தியப் பின்னணியில் உருவான இந்தப் படம் 2009-ம் ஆண்டு வெளியானது. இதில் தேவ் படேல், பிரீடா பின்டோ, அனில் கபூர், இர்பான் கான் பலர் நடித்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்த இந்தப் படம் 8 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை பெற்றது. இந்த படத்துக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு 2 ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன. இவரின் இசையில், 'ஜெய் ஹோ' பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஹிட் அடித்தது. மும்பையை சேர்ந்த பிரீடா பின்டோ, 'ஸ்லம்டாக் மில்லியனர்' படம் மூலம் ஹாலிவுட் நடிகையானார்.
இளம் வயதில் வறுமையால் பல இன்னல்களை அனுபவிக்கும் இளைஞன் கோடீஸ்வரனாகும் கதை இது. இப்படம் உலகளவில் ரூ. 400 கோடி வரை வசூலித்தது.
இந்நிலையில், ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் அடுத்த பாகம் மற்றும் டிவி உரிமையை, லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த 'பிரிட்ஜ் 7' என்ற நிறுவனத்தின் ஸ்வாதி ஷெட்டி, கிரான்ட் கெஸ்மேன் ஆகியோர் பெற்றுள்ளனர். இதனால் இந்தப் படத்தின் 2-ம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாகத் தெரிகிறது.
"சில கதைகள் எப்போதும் நம் மனதில் தங்கும். 'ஸ்லம்டாக் மில்லியனர்' படம் அதில் ஒன்று. அதன் விவரிப்பு உலகளாவியது, கலாச்சார மற்றும் எல்லைகளைத் தாண்டி, நாம் விரும்பும் வகையான கதையை கொண்டது" என்று ஸ்வாதி ஷெட்டி தெரிவித்துள்ளார்.