'வீர தீர சூரன்' பட இயக்குனரை பாராட்டிய நடிகர் எஸ்.ஜே.சூர்யா
|'வீர தீர சூரன்' பட இயக்குனரை பாராட்டி நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மதுரை,
சேதுபதி, சித்தா படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62-வது படமான 'வீர தீர சூரன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்த படத்திற்கு 'வீர தீர சூரன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக விக்ரமின் பிறந்த நாள் அன்று படக்குழு டீசர் வெளியிட்டு அறிவித்தது. இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்பு மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இந்தநிலையில், 'வீர தீர சூரன்' படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், இயக்குனர் அருண்குமாரை பாராட்டி நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மதுரையில், நேற்று இரவு இயக்குனர் அருண்குமார் 'வீர தீர சூரன்' படத்திற்கான கிளைமேக்ஸ் காட்சிகளை படமாக்கியுள்ளார். அதற்காக உதவி இயக்குனருடன் இணைந்து சுமார் 3 இரவுகள் படத்திற்காக ஒத்திகை பார்த்துள்ளார். மேலும் நான் ஒரு வார்த்தை சொல்ல விரும்புறேன், 'நீங்கள் கலைத்தாயின் இளையமகன்' என்று இயக்குனர் அருண்குமாரை பாராட்டியுள்ளார். மேலும் தயாரிப்பாளருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார் நடிகர் எஸ்.ஜே. சூர்யா.
இதற்கிடையில், வருகிற 15-ந் தேதி வெளியாக உள்ள 'தங்கலான்' படத்திற்கான புரமோசன் பணிக்காக தென்னிந்தியாவில் உள்ள இடங்கள் முழுவதும் பயணம் செய்து, அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களை கவரவுள்ளார் நடிகர் சியான் விக்ரம்.