< Back
சினிமா செய்திகள்
10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கும் எஸ்.ஜே.சூர்யா
சினிமா செய்திகள்

10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கும் எஸ்.ஜே.சூர்யா

தினத்தந்தி
|
2 Dec 2024 3:37 PM IST

கில்லர் படத்தை ஜனவரியில் தொடங்க உள்ளதாக இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.

சென்னை,

பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 15வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் பிரபல இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட எஸ்.ஜே.சூர்யாவுக்கு 25 வருடங்களாக திரைத்துறைக்கு ஆற்றிய பணிகளை பாராட்டி அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், விரைவில் அவர் படம் இயக்கவுள்ளதாக கூறியுள்ளார். அவர் பேசியதாவது, "ஜனவரியில் தொடங்க இருக்கிறேன். நியூ 2 மாதிரியான ஒரு படம். கில்லர் என்ற டைட்டிலில் உருவாகும். கேம் சேஞ்சர் படம் ரிலீஸாகி ஒரு வாரத்தில் படத்தின் அறிவிப்பு வரும்" என்றார்.

முன்னதாக கில்லர் படம் குறித்து தகவல் வெளியான நிலையில் இப்படத்தை எஸ்.ஜே.சூர்யாவே தயாரித்து இயக்கி அதில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும் பான் இந்தியா படமாக இப்படம் உருவாகவுள்ளதாகவும் படத்திற்காக ஒரு சொகுசு காரை ஜெர்மனியில் இருந்து தமிழ்நாட்டிற்கு எஸ்.ஜே. சூர்யா இறக்குமதி செய்துள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவித்தன.

சமீப காலமாக தொடர் வெற்றி படங்களை கொடுத்து பிஸியான நடிகராக வலம் வருகிறார் எஸ்.ஜே. சூர்யா. குறிப்பாக வில்லனாக இவர் நடித்த கதாபாத்திரங்கள் அனைத்தும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கடைசியாக சூர்யாவின் சனிக்கிழமை என்ற நானியின் தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். தமிழில் தனுஷின் ராயன் படத்தில் நடித்திருந்தார். இப்போது கேம் சேஞ்சர், இந்தியன் 3, எல்.ஐ.கே, வீர தீர சூரன், சர்தார் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

வாலி, குஷி போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யா. நியூ, அன்பே ஆருயிரே போன்ற படங்களை இயக்கி நடித்தார். கடந்த 2015ம் ஆண்டு 'இசை' படத்தை இயக்கி, நடித்திருந்தார். 10 ஆண்டுகள் கழித்து எஸ். ஜே. சூர்யா மீண்டும் இயக்குநராவது ரசிகர்களிடம் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்