கார் ரேஸிலும் வெற்றி கிடைக்கட்டும்... அஜித்தை வாழ்த்திய சிவகார்த்திகேயன்!
|கார் ரேஸில் கலந்துகொள்ளும் நடிகர் அஜித்திற்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித் நடிப்பதில் மட்டுமல்லாமல் ரேஸிங்கிலும் ஆர்வம் உடையவர். விடாமுயற்சி , குட் பேட் அக்லி ஆகிய படங்களை முடித்துவிட்டு கார் ரேஸிங்கில் பங்கேற்க துபாய் சென்றுள்ளார் அஜித். இதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக 'அஜித்குமார் ரேஸிங்' என்ற கார் ரேஸிங் அணியை தொடங்கி கடந்த சில மாதங்களாக அதற்கான பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்தார். அதைத்தொடர்ந்து துபாய் சென்று தனது அணியினருடன் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அஜித்தின் கார் தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. ஆனால் நடிகர் அஜித்துக்கு எந்தவித காயம் ஏற்படவில்லை. மேலும் தனது ரேஸிங் அனுபவம் குறித்து பேட்டி அளித்த அஜித், அடுத்த 9 மாதங்களுக்கு எந்த படத்தில் நடிக்கப் போவதில்லை எனவும் ரேஸிங்கில் தான்சாதிக்க விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் இன்று துபாயில் நடைபெறும் கார் ரேஸில் நடிகர் அஜித் மற்றும் அவரது குழுவினர் வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதேசமயம் திரைப்பிரபலங்களும் அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கார் ரேஸில் கலந்துகொள்ளும் அஜித்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், "துபாய் ரேஸில் பங்கேற்கும் நடிகர் அஜித்துக்கு என் வாழ்த்துகள். உங்களின் தீவிர ஆர்வமும் அற்பணிப்பும் எப்போதும் எங்களுக்கு ஊக்கமளித்து வருகின்றன. இதிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கட்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.