சீனாவில் வெளியாகும் 'மகாராஜா' படத்தை பாராட்டிய சிவகார்த்திகேயன்
|எல்லைகளைக் கடந்து செல்லும் படத்தை உருவாக்கிய 'மகாராஜா' படக்குழுவை சிவகார்த்திகேயன் வாழ்த்தியுள்ளார்.
சென்னை,
குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன், நடிகர் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய திரைப்படம் 'மகாராஜா'. இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த ஜூன் 14-ம் தேதி வெளியானது. வெளியான முதல் நாளிலிருந்தே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. விஜய் சேதுபதியின் 50- வது திரைப்படமான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, கதாநாயகனாக விஜய் சேதுபதிக்கும் ஒரு நல்ல கம்பேக் திரைப்படமாக அமைந்தது. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் ரீதியான வன்கொடுமையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் மக்களின் வரவேற்பை பெற்றது. ஒரு சாதாரண கதையை நிதிலன் அவரது நான் லீனியர் திரைக்கதை யுக்தியால் படத்தை சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கி மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தார். இதன் எதிரொலியால், படத்தின் வசூல் ரூ.100 கோடியை தாண்டியது. திரை வெற்றியைத் தொடர்ந்து ஓ.டி.டி.யிலும் மக்களின் வரவேற்பை பெற்றது. நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்தாண்டு வெளியான இந்தியப் படங்களிலேயே அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் மகாராஜா 2 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் விஜய் ஆகியோர் இயக்குனர் நித்திலன் சாமிநாதனை நேரில் அழைத்து பாராட்டினர்.
மகாராஜா திரைப்படத்தை சீன மொழியில் டப்பிங் செய்து சீனாவில் இன்று வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் வெளியீட்டு உரிமத்தைப் பெற்ற அலிபாபா குழுமம் 40,000 திரைகளில் படத்தை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஜா திரைப்படம் தற்போது சீன மொழியில் வெளியாகியிருக்கும் நிலையில், படம் வெற்றி பெற வேண்டுமென சிவகார்த்திகேயன் தற்போது வாழ்த்தியுள்ளார். இது தொடர்பான அவரின் எக்ஸ் பதிவில், "மகாராஜா படம் சீனாவில் பிரமாண்டமாக வெளியாகிறது. இந்த சாதனையைப் பற்றிப் பெருமைப்படுவதோடு, அங்கும் இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று நம்புகிறேன். எல்லைகளைக் கடந்து செல்லும் இப்படியொரு படத்தை உருவாக்கிய ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மகாராஜா திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகவும், நடிகர் அமீர்கான் அதில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.