< Back
சினிமா செய்திகள்
நான் சினிமாவுக்குள் வந்ததே சிலருக்கு பிடிக்கவில்லை - நடிகர் சிவகார்த்திகேயன்
சினிமா செய்திகள்

நான் சினிமாவுக்குள் வந்ததே சிலருக்கு பிடிக்கவில்லை - நடிகர் சிவகார்த்திகேயன்

தினத்தந்தி
|
7 Jan 2025 6:06 PM IST

என்னுடைய வெற்றியின் மூலம் வெறுப்பாளர்களுக்கு நான் பதில் தர விரும்பவில்லை. என் வெற்றி என்னுடன் சேர்ந்து 100 சதவீத உழைப்பை போடும் என்னுடைய குழுவினருக்கானது என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'அமரன்' படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் சுமார் ரூ.350 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் இவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் 24-வது படத்தில் நடிக்க உள்ளார். இதற்கிடையில் இவர் 'சூரரைப் போற்று' படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் எஸ்கே 25 எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் ஆங்கில யூடியூப் சேனல் ஒன்றுக்கு சிவகார்த்திகேயன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: "இந்த துறையில் என்னை போன்ற சாதாரண ஆட்கள் வருவதை சிலர் மட்டுமே வரவேற்கின்றனர். சில குழுக்கள் அதில் மகிழ்ச்சி அடையவில்லை. இந்த துறைக்கு வருவதற்கு அவர் யார் என்று கேட்டனர். இன்னும் சிலர் என் முகத்துக்கு நேராகவே 'இந்த துறையில் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்' என்று கேட்டனர். அவர்களுக்கு நான் எந்த பதிலும் சொல்வதில்லை. சிரித்துக் கொண்டே கடந்துவிடுகிறேன். என்னுடைய வெற்றியின் மூலம் அவர்களுக்கு நான் பதில் தர விரும்பவில்லை. என் வெற்றி அவர்களுக்கானது அல்ல.

என் வெற்றி என்னுடன் சேர்ந்து 100 சதவீத உழைப்பை போடும் என்னுடைய குழுவினருக்கானது. வெற்றியோ தோல்வியோ என்னை கொண்டாடும் என் ரசிகர்களுக்கானது. 'உங்களை போல நாங்களும் வரவேண்டும் அண்ணா' என்று சொல்லும் மக்களுக்கானது. கடந்து செல்வது மட்டுமே அவர்களை கையாள்வதற்கான ஒரே வழி. சமூக வலைதளங்களில் சிலர் என் படம் தோல்வியடைந்தால் அதற்கு காரணம் நான் தான் என்று கூறி என்னை தாக்குவார்கள், ஆனால் படம் வெற்றி அடைந்தால் என்னை தவிர மற்ற எல்லாரையும் பாராட்டுவார்கள்" இவ்வாறு சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்