திருமணத்திற்குப் பிறகு முதல் முறையாக ஒரு படத்தில் இணையும் சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி?
|நடிகை கியாரா அத்வானி 'புக்லி' என்ற திரைப்படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி. இவர் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான 'புக்லி' என்ற திரைப்படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, எம்.எஸ். தோனி, பரத் எனும் நான் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான 'செர்ஷா' படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா உடன் நடித்திருந்தார்.
அப்போது, நடிகை கியாரா அத்வானிக்கும் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு காதல் ஏற்பட, கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து, திருமணத்திற்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்கும் படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி சித்தார்த்தும் கியாராவும், தினேஷ் விஜனின் மேடாக் பிலிம்ஸின் கீழ் ஒரு படத்தில் நடிக்க கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.