சித்தார்த்தின் 40-வது படத்தின் புதிய அப்டேட்
|நடிகர் சித்தாார்த்தின் 40-வது படத்தில் நடிக்கும் நடிகர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை,
நடிகர் சித்தார்த் இயக்குனர் ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' திரைப்படம் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார். பின்னர் மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'ஆயுத எழுத்து' திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதை கவர்ந்தார். நடிகர், தயாரிப்பாளர் என இரண்டு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார் சித்தார்த்.
கடைசியாக இவர் தயாரித்து நடித்த சித்தா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இப்போது கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தநிலையில், சித்தார்த் 'மிஸ் யூ' என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது சித்தார்த்தின் 40-வது படம் தயாராக உள்ளது. இந்தப்படத்தினை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த ஆண்டு மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியானது மாவீரன் திரைப்படம். இப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து மாபெரும் வெற்றியடைந்தது. எட்டு தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இப்படத்தை இயக்குகிறார்.
இந்தப்படத்தில் சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத், கன்னட நடிகை சைத்ரா அச்சர் உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பதாக தனது எக்ஸ் தளபக்கத்தில் படக்குழு அறிவித்துள்ளனர்.
தேவயானி மற்றும் சரத்குமார் 1990- களில் பல வெற்றிபடங்களான சூர்ய வம்சம், தென்காசி பட்டணம் மற்றும் பாட்டாளி போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். அதற்கு அடுத்து இப்படத்தில் இணைந்து நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.