'பதான்', 'ஜவான்' படங்களின் சாதனையை 'ஸ்ட்ரீ 2' முறியடித்தது பற்றி பகிர்ந்த ஸ்ரத்தா கபூர்
|ஷாருக்கானின் பதான், ஜவான் உள்ளிட்ட பல படங்களின் வசூல் சாதனையை 'ஸ்ட்ரீ 2' முறியடித்தது.
மும்பை,
அமர் கவுஷிக் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 'ஸ்ட்ரீ ' படத்தின் வெற்றியைத்தொடர்ந்து, இப்படத்தின் 2-ம் பாகம் கடந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர் ஆகியோருடன் பங்கஜ் திரிபாதி, அபர்சக்தி குரானா மற்றும் அபிஷேக் பானர்ஜி ஆகியோரும் நடித்தனர்.
இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.700 கோடி வசூலித்தது. மேலும், ஷாருக்கானின் பதான், ஜவான் பிரபாசின் பாகுபலி 2 உள்ளிட்ட படங்களில் இந்தி வசூல் சாதனை முறியடித்து அதிக வசூல் செய்த இந்திப் படமாக 'ஸ்ட்ரீ 2' மாறியது. இந்நிலையில், ஷாருக்கானின் பதான், ஜவான் படங்களின் சாதனையை ஸ்ட்ரீ 2 முறியடித்தது பற்றிய கேள்விக்கு ஸ்ரத்தா கபூர் பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
''ஸ்ட்ரீ 2' திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதை பார்க்கையில் உற்சாகமாக இருக்கிறது. இவ்வளவு அன்பைப் பெற்ற படத்தின் ஒரு பகுதியாக இருந்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்திய சினிமாவின் ஒரு அற்புதமான நடிகர் ஷாருக்கான். அவரது தீவிர ரசிகையாகதான் நான் வளர்ந்தேன். 'ஸ்ட்ரீ 2' படம், இந்தப் படம் அந்தப் படம் என பல படங்களில் வசூல் சாதனையை முறியடித்துவிட்டது என்று நீங்கள் மீண்டும் மீண்டும் சொல்கிறீர்கள். என்னை பொருத்தவரை எந்த ஒரு இந்தி படமும் நன்றாக வருவது பாலிவுட் சினிமாக்குத்தான் நல்லது' ' என்றார்.