நடிகர் விமல் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு
|நடிகர் விமல் மற்றும் யோகி பாபு கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
சென்னை,
நடிகர் விஜய் நடித்த "தமிழன்" மற்றும் துணிச்சல், டார்ச் லைட் போன்ற பல வெற்றிப்படத்தை இயக்கியவர் அப்துல் மஜீத். இவர் தற்போது விமல், யோகி பாபு நடிக்கும் புதிய படமொன்றை அதிக பொருட்செலவில் தயாரித்து இயக்கி வருகிறார். இப்படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
இன்று உலகமே புரோக்கர் மயமாகிவிட்டது. அதில் சில புரோக்கர்கள் சுயநலத்தோடு தொழில் ரீதியாக மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள், அதனால் மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், அந்த பாதிப்பில் இருந்து கதாநாயகன் மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதை காமெடி, ஆக்சன், ரொமான்ஸ் கலந்து இப்படம் சொல்கிறது.
கதாநாயகன் விமலுக்கு ஜோடியாக சாம்பிகா, ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், ரவிமரியா, எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ஞானசம்பந்தம், பவர் ஸ்டார், சாம்ஸ், நமோ நாராயணன் என பெரிய நட்சத்திர பட்டாளமே இத்திரைப்படத்தில் நடித்து வருகின்றது.
இப்படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு சென்னையிலும், அதன் சுற்றுபுறங்களிலும் நடந்து முடிந்துள்ள நிலையில், கிளைமாக்ஸ் காட்சி வேலூர், ராணிப்பேட்டை பகுதியில் அரண்மனை போன்ற அமைப்பு கொண்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
தற்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். மேலும் இந்த படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வருகின்ற தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விமல் நடிப்பில் போகுமிடம் வெகு தூரமில்லை, சார் போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.