< Back
சினிமா செய்திகள்
அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள நடிகர் சிவராஜ் குமார் முடிவு
சினிமா செய்திகள்

அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள நடிகர் சிவராஜ் குமார் முடிவு

தினத்தந்தி
|
9 Nov 2024 9:15 PM IST

உடல் நல பிரச்சினை காரணமாக தற்போது சிகிச்சை பெற்று வருகிறேன். விரைவில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள அமெரிக்கா போகிறேன் என நடிகர் சிவராஜ் குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் மூத்த மகன் சிவராஜ் குமார். இவர் கன்னட சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டு வருகிறார். கர்நாடகாவில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சிவராஜ் குமார் கன்னடம் மட்டுமின்றி பிற மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் மற்றும் தனுஷின் கேப்டன் மில்லர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் சிவராஜ் குமார் நடித்துள்ள 'பைரதி ரணகல்' கன்னட திரைப்படம் வரும் நவம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனிடையே சிவராஜ் குமார் உடல் நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான சூழலில், படத்தின் புரொமோஷனுக்கான நேர்காணலில் தனது உடல் நிலை குறித்து விளக்கம் அளித்துள்ளார் சிவராஜ்குமார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "நானும் மனிதன்தான். எனக்கும் உடல் நல பிரச்சினைகள் உண்டு. அதற்காக நான் சிகிச்சை பெற்று வருகிறேன். இரண்டு சிகிச்சை அமர்வுகள் முடிந்துவிட்டன. இன்னும் சில அமர்வுகள் உள்ளன. அந்த சிகிச்சை முடிந்த பின் அடுத்த கட்டமாக இந்தியாவிலோ அல்லது அமெரிக்காவிலோ அறுவை சிகிச்சை செய்து கொள்ள இருக்கிறேன். அதன் பிறகு ஒரு மாதம் ஓய்வு எடுத்துக்கொண்டு மீண்டும் திரைத் துறைக்கு திரும்புவேன். எனக்கு இருக்கும் உடல் நல பிரச்சினையை அறிந்துகொண்டபோது முதலில் பதற்றதமாகத் தான் இருந்தது. ஆனால், அது தொடர்பாக மக்களையும் பததற்றப்படுத்த வேண்டாம் என்று வெளியில் சொல்லவில்லை. பின்னர் இதனை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை வரவழைத்துக் கொண்டேன். இப்போது எனது உடல்நிலை நன்றாக உள்ளது. கவலைப்பட தேவையில்லை" என தெரிவித்துள்ளார். அவரது உடல்நிலையில் என்ன பிரச்சினை என்பது குறித்து வெளிப்படையாக சிவராஜ்குமார் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிவராஜ்குமாரின் தந்தை ராஜ்குமார் மாரடைப்பு ஏற்பட்டு 2006ல் மரணமடைந்தார். அதேபோல் சிவராஜ்குமாரின் தம்பியான புனித் ராஜ்குமார் தனது 46 வயதில் கடந்த 2021ம் ஆண்டில் மாரடைப்பால் இறந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்