'ஷாருக்கான் எதையும் மறக்கமாட்டார்' - பிரபல பாலிவுட் நடிகை
|ஷாருக்கானுடன் பணிபுரிந்த அனுபவத்தை வித்யா மால்வதே பகிர்ந்துள்ளார்.
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகை வித்யா மால்வதே. இவர் கடந்த 2003-ம் ஆண்டு விக்ரம் பட் இயக்கத்தில் வெளியான 'இன்டெஹா' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. பின்னர் 2007-ம் ஆண்டு வெளியான 'சக் தே இந்தியா' படத்தில் ஷாருக்கானுடன் நடித்திருந்தார்.
இப்படம் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி பாகிஸ்தானிடம் தோல்வியடைந்த பிறகு அணியின் முன்னாள் கேப்டன் கபீர் கான் பெண்கள் ஆக்கி அணியின் பயிற்சியாளராக மாறுவது பற்றியது. இதில் பயிற்சியாளர் கபீர் கானாக ஷாருக்கான் நடிக்க இந்திய பெண்கள் ஆக்கி அணியின் கேப்டன் வித்யா ஷர்மாவாக வித்யா மால்வதே நடித்திருந்தார்.
இப்படத்தில் இவரின் நடிப்புக்கு பல பாராட்டுகள் கிடைத்தன. இந்நிலையில், இப்படத்தில் ஷாருக்கானுடன் பணிபுரிந்த அனுபவத்தை வித்யா மால்வதே பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில்,
"'சக் தே இந்தியா'படத்தில் ஷாருக்கான் கடுமையான உழைப்பை கொடுத்தார். 16 பெண்களுடன் பணிபுரிவது யாருக்கும் அவ்வளவு சுலபம் கிடையாது. அவர் எதையும் மறக்க மாட்டார், அவரது நினைவாற்றல் மிகவும் கூர்மையானது' என்றார்.