புகைப்பிடிப்பதை நிறுத்திவிட்டேன் - நடிகர் ஷாருக்கான்
|புகைப்பிடிப்பதை நிறுத்திவிட்டேன் என்று நடிகர் ஷாருக்கான் கூறியுள்ளார்.
மும்பை,
ஒரே வருடத்தில் பதான், ஜவான் என இரண்டு ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் கொண்ட படங்கள். அடுத்ததாக ராஜ்குமார் ஹிரானியுடன் உறுதியாக ஹிட் அடிக்கும் என்ற நம்பிக்கையோடு டங்கி என 59 வயதிலும் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறார் ஷாருக்கான்.
இவர் முதலில் தொலைக்காட்சி தொடரில் நடிக்க ஆரம்பித்த நிலையில், அதில் வந்த கதாபாத்திரம் மக்களை வெகுவாக கவர்ந்தது. அதனைத்தொடர்ந்து அவர் ஆங்கிலத் தொலைக்காட்சி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். 1992ம் ஆண்டு தீவானா என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
தொடர்ந்து பாசிகர், தர், கரண் அர்ஜுன், தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே, குச் குச் ஹோதா ஹை, தேவதாஸ், ஸ்வதேஸ், சக் தே இந்தியா போன்ற படங்களில் நடித்து பாலிவுட்டின் பாட்ஷாவாக மாறினார். திரைப்படங்களில் மட்டும் நடிக்காமல் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் பணியாற்றினர். ஷாருக்கானின் சொத்து மதிப்பு 7310 கோடியாக உள்ளது.
இந்நிலையில் நேற்று ஷாருக்கான் அவரது 59-வது பிறந்தநாளை தனது ரசிகர்களுடன் கொண்டாடினார். அப்பொழுது நடைப்பெற்ற மீட் அண்ட் கிரீட் என்ற பிறந்தநாள் விழாவில் ஷாருக்கான் "நான் இப்பொழுது புகைப்பிடிப்பதை நிறுத்திவிட்டேன். புகைப்பிடிப்பதை நிறுத்திய பின் சுவாசம் சீராக இருப்பதை உணரமுடிகிறது" என கூறியுள்ளார். இது ரசிகர்களுக்கு மிகவும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.
2011ம் ஆண்டு நடந்த ஒரு நேர் காணலில் ஷாருக்கான் தான் ஒரு நாளைக்கு 100 சிகரெட் பிடிப்பேன். உணவு , தண்ணீர் என எதுவும் உட்கொள்ளாமல், 30 கப் காபி மட்டும் குடித்துக்கொண்ட காலமும் இருந்தது என கூறியது குறிப்பிடத்தக்கது.
ஷாருக்கான் மீது அத்தனை கோடி பேர் அன்பு செலுத்த திரைப்பிம்பம் மட்டுமே காரணமில்லை. அதைத் தாண்டி தன்னை யதார்த்தமாக நிறுத்திக் கொள்ளும் தன்மைதான் அவரை சுற்றி இவ்வளவு இதயங்கள் குவிய காரணமாக இருக்கிறது.