ஐஸ்வர்யா ராயுடன் ஷாருக்கான், அமீர்கான் நடிக்க மறுப்பு...சல்மான் கான் நடித்து 4 தேசிய விருதுகளை வென்ற படம்
|ஐஸ்வர்யா ராய், சல்மான் கான் நடித்த இப்படம் ரூ.15 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு ரூ.50 கோடி வசூலித்தது.
சென்னை,
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் கடந்த 1999-ம் ஆண்டு வெளியான படம் 'ஹம் தில் தே சுகே சனம்'. இப்படத்தில், சல்மான் கான், ஐஸ்வர்யா ராய் மற்றும் அஜய் தேவ்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இப்படம் ரசிகர்களிடையே நல்ல பாராட்டுகளை பெற்று பாலிவுட்டில் மிகவும் பிரபலமான காதல் படங்களில் ஒன்றாக மாறியது.
இப்படத்திற்கு முன்பு, சல்மான் கான் நடிப்பில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான 'காமோஷி: தி மியூசிக்கல்' படத்தை சஞ்சய் லீலா பன்சாலிதான் இயக்கி இருந்தார். இதன் காரணமாக 'ஹம் தில் தே சுகே சனம்' படத்தில் நடிக்க சல்மான் கானை தேர்ந்தெடுத்திருக்கிறார். கதாநாயகியாக ஐஸ்வர்யாராயை தேர்வு செய்திருக்கிறார்.
அதனைத்தொடர்ந்து, 3-வது முக்கிய காதாபாத்திரமான வனராஜ் பாத்திரத்தில் நடிக்க அமீர் கான், ஷாருக்கான், அக்சய் குமார், சஞ்சய் தத் மற்றும் அனில் கபூர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை சஞ்சய் லீலா பன்சாலி அணுகியதாக தெரிகிறது.
ஆனால், சில காரணங்களுக்காக அவர்கள் அனைவரும் அந்த பாத்திரத்தை நிராகரித்ததாக கூறப்படுகிறது. இறுதியில், அப்பாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடித்தார்.
சுமார் ரூ.15 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட 'ஹம் தில் தே சுகே சனம்' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ. 50 கோடி வசூலித்து பிளாக்பஸ்டர் ஆனது. இதற்கு இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் முக்கிய பங்கு வகித்தது.
இவ்வாறு முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க மறுத்த இந்த படம் 4 தேசிய விருதுகளை வென்றது மட்டுமில்லாமல், 45வது பிலிம்பேர் விழாவில் 17 விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டு 8 விருதுகளை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.