"எனக்கு சுயமரியாதை முக்கியம்; இதோடு நிறுத்துங்கள்..." - நடிகை சிம்ரன்
|சமூகவலைத்தளங்களில் தன்னைப் பற்றி பரவிவரும் வதந்திகளுக்குப் பதிலடி கொடுத்திருக்கிறார் நடிகை சிம்ரன்.
சென்னை ,
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக கொடிகட்டி பறந்தவர் நடிகை சிம்ரன். இவர் திருமணத்துக்கு பிறகு சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்து விட்டு, இப்போது மீண்டும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் வெளியான 'அந்தகன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும் சிம்ரன் அடுத்ததாக லோகேஷ் குமார் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு 'தி லாஸ்ட் ஒன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் குமார் இயக்கத்தில் வெளியான 'மை சன் இஸ் கே' என்ற படம் இதுவரை 4 விருதுகள் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபமாகச் சமூகவலைத்தளங்களில் சிம்ரன் பற்றிய வதந்திகள் வைரலாகி வருகிறது. தன்னைப் பற்றிப் பரவி வரும் வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில், என்னைப் பற்றி பொய்யான வதந்திகளைப் பரப்புபவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்டாக வேண்டும் என மிகவும் காட்டமாக பதிவிட்டிருக்கிறார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் , "உணர்வு ரீதியாகவும், மன ரீதியாகவும் ஒருவரைப் பாதிக்கும் படியாகச் சிலர் எப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்பதை பார்க்கையில் மனவருத்தமாக இருக்கிறது. என் திரையுலக வாழ்வில் இதுவரை நான் எந்த வதந்திகளுக்கும் பதிலளித்தது கிடையாது. இப்படியான விஷயங்களைக் கடந்து சென்றுவிடுவேன். ஆனால் இப்போது என்னைப் பற்றிப் பரவி வரும் வதந்திகளுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
இதுவரை நான் எந்த பெரிய கதாநாயகர்களுடன் இணைந்து பணியாற்ற ஆசைப்பட்டதில்லை. வாய்ப்புகள் வந்தபோது நடித்திருக்கிறேன் அவ்வளவுதான். இப்போது என் இலக்குகள், என் வாழ்க்கை எல்லாம் முற்றிலும் மாறிவிட்டன.
சமூகவலைத்தளங்களில் என் பெயரை, வேறு ஒருவருடன் இணைத்துப் பேசுவதைப் பல ஆண்டுகள் சகித்துக் கொண்டு அமைதியாக இருந்தேன். ஆனால், சுயமரியாதை என்பது எல்லாவற்றையும் விட ரொம்ப முக்கியம். 'Stop' என்பது பவர்புல்லான வார்த்தை. அதை இப்போது பயன்படுத்துவது சரியாக இருக்கும். இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவதை இத்தோடு நிறுத்திவிடுங்கள் என்பதை அழுத்தமாகக் கூறிக்கொள்கிறேன்.
இங்கு யாரும் நமக்கு ஆதரவாக நிற்கப்போவதில்லை. நாம்தான் நமக்காகக் குரல் கொடுத்தாக வேண்டும். எனக்காக நான்தான் பேசியாக வேண்டும். நம் சினிமா துறையில் நேர்மை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். என்னைப் பற்றி பொய்யான வதந்திகளைப் பரப்புபவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்டாக வேண்டும்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.