
இயக்குநர் மிஷ்கின் பேசியதில் எந்த தவறும் இல்லை - சமுத்திரக்கனி

‘பாட்டல் ராதா’ திரைப்பட நிகழ்வில் மிஷ்கினின் பேச்சு அநாகரிகமாக இருந்தாலும், தவறான உள்நோக்கத்துடன் அவர் பேசவில்லை என சமுத்திரக்கனி கருத்து தெரிவித்துள்ளார்.
'பாட்டல் ராதா' டிரெய்லர் வெளியீட்டு விழாவில் மதுப்பழக்கத்தின் அடிமைத்தனம் மற்றும் தீங்கைக் குறித்து பலர் பேசினர். ஆனால், இயக்குநர் மிஷ்கின் மதுப்பழக்கத்தைக் கொண்டாடுவதாகக் கூறி தன் பேச்சை துவங்கினார். இயக்குனர் மிஷ்கின் பேசிய அவதூறு வார்த்தைகள் சர்ச்சைக்குள்ளானது. இந்த விஷயத்தை குறித்து திரைத்துறையை சேர்ந்த பலரும் மிஷ்கினை கண்டித்து வீடியோவை பதிவிட்டனர். இதனால், 'பேட் கேர்ள்' டீசர் நிகழ்வில் பேசிய மிஷ்கின், தன் பேச்சுக்காக அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டார்.
இந்நிலையில் நந்தா பெரியசாமி இயக்கத்தில் வெளியான திரு.மாணிக்கம் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சமுத்திரக்கனியிடம் 'மிஷ்கின் இளையராஜாவை ஒருமையில் பேசியதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' எனக் கேட்கப்பட்டது. அதற்கு, சமுத்திரக்கனி, "மிஷ்கின் ஒரு அன்பின் வெளிப்பாட்டில் அப்படி பேசியிருக்கிறார். அதை நான் தவறாக பார்க்கவில்லை. அது அவருடைய இயல்பான குணம். அன்பின் உச்சத்தில் என்னவேண்டுமானாலும் நடக்கும். அவரைப் பற்றி புரிந்தவர்களுக்கு தெரியும். புரியாதவர்களுக்குதான் இந்த மன்னிப்பு. மேடையில் மிஷ்கின் பேசியபோது கைதட்டி ரசித்துவிட்டு, பின்பு மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள். என்னுடைய அண்ணனுக்காக நானும் கூட உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.