சமுத்திரக்கனி, தம்பிராமையா நடித்துள்ள "ராஜாகிளி" படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
|50-வயதை கடந்த தொழிலதிபர் ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து வித்தியாசமான கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது.
சென்னை,
தம்பி ராமையா கதை, வசனம் எழுதி அவரது மகன் உமாபதி ராமையா இயக்கியுள்ள திரைப்படம் 'ராஜாகிளி'. இந்த படத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே சமுத்திரக்கனி மற்றும் தம்பி ராமையா இருவரும் 'சாட்டை, அப்பா மற்றும் விநோத சித்தம்' ஆகிய படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் அவர்களுடன் இணைந்து எம்.எஸ்.பாஸ்கர், பழ கருப்பையா, இளவரசு, ஆடுகளம் நரேன், ரேஷ்மா, ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரித்துள்ளார். கோபிநாத், கேதார்நாத் இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சுதர்சன் ஆர் படத்தொகுப்பு செய்துள்ளார். 50-வயதைக் கடந்த தொழிலதிபர் ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகியிருக்கிறது. மேலும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரெய்லர், டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து விட்டன. இப்படம் கடந்த நவம்பர் 29-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிருந்தது. ஆனால் ஒரு சில காரணத்தால் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.