நடிகர் தர்சனால் படுகொலையான ரேணுகாசாமியின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது
|ரேணுகாசாமி படுகொலை வழக்கில் நடிகர் தர்சன் மற்றும் நடிகை பவித்ரா கவுடாவுக்கு ஜாமீன் வழங்க பெங்களூருவில் உள்ள சிவில் கோர்ட்டு மறுப்பு தெரிவித்து விட்டது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவை சேர்ந்தவர் ரேணுகாசாமி. நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகரான இவர், அவருடைய தோழியான நடிகை பவித்ரா கவுடாவுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பி இருந்தார். இதனால் அவரை நடிகர் தர்ஷன், தனது கூட்டாளிகள் மூலம் கடத்தி வந்து படுகொலை செய்தார். இதுதொடர்பாக நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நடிகர் தர்சனின் ரசிகரான ரேணுகாசாமி படுகொலை செய்யப்பட்டபோது, அவருடைய மனைவி சஹானா 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில், அவருக்கு கர்நாடகாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று மாலை ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.
இதுபற்றி ரேணுகாசாமியின் தந்தை காசிநாத் சிவானகவுடர் உணர்ச்சி பொங்க கூறும்போது, மகிழ்ச்சியை உணர்ந்தேன் என்றார். அவருடைய மகன் குழந்தை வடிவத்தில் திரும்ப வந்து விட்டான் என்றும் கூறினார். சஹானாவுக்கு மாலை 6.55 மணியளவில் குழந்தை பிறந்தது என்றும் கூறியுள்ளார். இலவச சிகிச்சை அளித்ததற்காக மருத்துவமனை மற்றும் மருத்துவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்து கொண்டார். தாயும் சேயும் உடல்நலத்துடன் உள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் பெங்களூருவில் உள்ள சிவில் கோர்ட்டு ஒன்று, இந்த கொலை வழக்கில் நடிகர் தர்சன் மற்றும் நடிகை பவித்ரா கவுடாவுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து இருந்தது. இதனால், அவர்கள் இருவரும் சிறையிலேயே தொடர்ந்து அடைக்கப்பட்டு உள்ளனர். எனினும், குற்றம்சாட்டப்பட்டவர்களில் சிலர் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.