பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்வது மிகவும் தவறு - ஏ.ஆர்.ரகுமான்
|'இசைப்புயல்' ஏ.ஆர்.ரகுமான் பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்யும் கலாச்சாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை,
இந்தியத் திரைப்பட உலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் 1992-ம் ஆண்டு வெளிவந்த 'ரோஜா' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழ், இந்தி , ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் 'இசைப்புயல்' என அழைக்கப்படுகிறார்.
இந்த நிலையில், தமிழ் திரையுலகில் சமீப காலமாக பாடல் ரீமீக்ஸ் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. பழைய படங்களில் இடம் பெற்ற பாடல்களை ரீமிக்ஸ் செய்து புதிய படங்களில் இடம்பெறச் செய்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களும் ரீமீக்ஸ் செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பாடல் ரீமிக்ஸ் கலாச்சாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ''சில வருடங்களுக்கு முன்பு வந்த பழைய படங்களில் இருக்கும் பாடல்களை காப்பி அடித்து ரீமிக்ஸ் செய்கிறார்கள். அதை பெருமையாகவும் பேசுகிறார்கள். அப்படி பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்வது மிகவும் தவறு. பாடலை உருவாக்கியவர்களின் அனுமதியை பெறாமல் பாடலை ரீமிக்ஸ் செய்வது சரியல்ல. தற்போது இசையில் ஏ.ஐ தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதால் வரும் நாட்களில் இது பல பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும். இதனால் நிறைய பேர் வேலை இழக்க நேரிடும்'' என்றார்.