கதைக்கு தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிக்க தயார் - சுபிக்ஷா கிருஷ்ணன் பேட்டி
|நான் சிம்புவின் தீவிர ரசிகை அவருடன் நடிக்க ஆசை என்று சுபிக்ஷா கிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழில் பாரதிராஜாவின் `அன்னக்கொடி' படத்தில் அறிமுகமாகி `கடுகு', `கோலிசோடா-2', `கண்ணை நம்பாதே', `சந்திரமுகி-2' போன்ற பல படங்களில் நடித்தவர், சுபிக்ஷா கிருஷ்ணன். `கோலிசோடா-2' படத்தில் `பொண்டாட்டி நீ... பொண்டாட்டி நீ...' பாடல் பட்டிதொட்டியெங்கும் இவரை பிரபலப்படுத்தியது. தமிழைத் தொடர்ந்து மலையாளம், தெலுங்கு படங்களிலும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் சுபிக்ஷா கிருஷ்ணன், `ஜிம்'மில் தீவிர உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும்போது `தினத்தந்தி' நட்சத்திர பேட்டிக்காக அணுகினோம். வியர்வை சொட்டச் சொட்ட விறுவிறுப்பாக பேட்டி கொடுத்தார்.
கர்நாடகாவில் பிறந்தாலும் தமிழ் அழகாக பேசுகிறீர்களே...
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் என 5 மொழிகளும் எனக்கு அத்துப்படி. தமிழ் எனக்கு பிடித்த மொழி. மொழி தெரியாமல் நடிக்க எனக்குப் பிடிக்காது. அதனாலேயே அனைத்து மொழிகளையும் கற்று தேர்ந்தேன்.
சினிமா நடிகை என்றாலே கிசுகிசுக்களுக்கு ஆளாகிவிடுகிறார்களே, ஏன்?
சினிமா ஒரு நல்ல பாதுகாப்பான துறை. சூட்டிங் தொடங்கியது முதல் முடியும் வரை பாதுகாப்பாகவே நடத்துகிறார்கள். சம்பளத்துடன் சகல மரியாதையும் கொடுக்கிறார்கள் (அப்பப்போ ஜூஸ் உள்பட). பொத்தாம்பொதுவாக இத்துறையை குற்றம் சொல்வது தவறு.
மீனாவுக்கு கண் அழகு, ரம்பாவுக்கு தொடை அழகு, சிம்ரனுக்கு இடுப்பு அழகு. அதுமாதிரி சுபிக்ஷாவுக்கு எது அழகு?
வில்லங்கமாகவே கேட்கிறீங்களே... எனக்கு என் முகம் அழகு என்று சொல்கிறார்கள். குறிப்பாக `மூக்கு ரொம்ப அழகா இருக்கு'ன்னு நிறைய பேர் சொல்லிக் கேட்டிருக்கிறேன் (வெட்கத்துடன்).
கதைக்கு தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிப்பீர்களா? முத்தக்காட்சி உள்பட...
மாடர்னாக நிச்சயம் நடிப்பேன். ஒருவேளை கவர்ச்சி என்பது அவசியம் என்றால், என்னிடம் எப்படி கதை சொன்னார்களோ, அதை அப்படியே திரையில் காட்டுவதாக இருந்தால் கவர்ச்சிக்கு நான் தயார். கவர்ச்சியை வெறும் ஊறுகாய் போல பயன்படுத்துவதை, வலுக்கட்டாயமாக படத்தில் திணிப்பதை என்னால் ஏற்கவே முடியாது.
யாருடன் நடிக்க ஆசை?
இந்தக் கேள்வியை கேட்காமல் இருந்தால் நானே சொல்லியிருப்பேன். எனக்கு சிம்புவுடன் நடிக்க ரொம்ப ஆசை. சிம்புவின் தீவிர ரசிகை நான். அவரது நடிப்பும், உழைப்பும் வியக்க வைக்கிறது. `கோலிசோடா-2' படத்தில் எனது நடிப்பை பார்த்து அவரே பாராட்டியது என் வாழ்நாள் விருது போன்றது. அதேபோல உதயநிதி ஸ்டாலினின் பாராட்டும் மறக்க முடியாதது என்றார்.