தனுஷின் 'குபேரா' படம் - ராஷ்மிகா மந்தனாவின் பர்ஸ்ட் லுக் வீடியோ வெளியானது
|'குபேரா' படத்தின் ராஷ்மிகா மந்தனாவின் பர்ஸ்ட் லுக் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
சென்னை,
ராயன் படத்தை தொடர்ந்து தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் இளையராஜா பயோ-பிக், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படம் எனக் கைவசம் வைத்துள்ளார்.
இதில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் 'குபேரா' படம் தனுஷின் 51-வது படமாக உருவாகிறது. ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. இந்தப் படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு திருப்பதி, தாய்லாந்து, மும்பை பகுதிகளில் நடைபெற்று முடிந்தது. தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்கியுள்ளது. இதில், தனுஷின் சண்டைக்காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ராஷ்மிகா மந்தனாவின் பர்ஸ்ட் லுக் தொடர்பான வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், இரவு நேரத்தில் காட்டுப் பகுதியில் ராஷ்மிகா மந்தனா ஆர்வத்துடன் வந்து கடப்பாறையைக் கொண்டு கீழே தோண்டுகிறார். சீறிக் கொண்டு தோண்டியதில், சூட்கேஸ் ஒன்றை எடுக்கிறார். அந்த சூட்கேஸ் முழுக்க பணம் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்த ராஷ்மிகா, அதைத் தொட்டு கும்பிடுகிறார். மீண்டும் அந்த சூட்கேஸை மூடிவிட்டு, அதை எடுத்துக் கொண்டு நகர்கிறார் என்பதோடு முடிகிறது.