வருங்கால கணவர் குறித்த கேள்வி... காதலை உறுதிப்படுத்திய நடிகை ராஷ்மிகா
|புஷ்பா 2 படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்ற நிலையில், தன்னுடைய காதலன் பற்றி முதன்முறையாக பேசி இருக்கிறார் ராஷ்மிகா.
சென்னை,
அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக அறியப்பட்டார் விஜய் தேவரகொண்டா. கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த ராஷ்மிகா மந்தனாவுக்கு திரையுலகில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, டியர் காம்ரெட் படத்திலும் இருவரும் ஜோடியாக நடித்தனர். இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து, அல்லு அர்ஜுன், கார்த்தி, விஜய் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் பான் இந்தியா படங்களில் ராஷ்மிகா நடித்து வருகிறார்.இதற்கிடையே, விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் காதலித்து வருவதாக தகவல் வெளியானது. இதுகுறித்து, இருவரும் இதுவரை கருத்து சொல்லவில்லை.
'புஷ்பா தி ரைஸ்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக 'புஷ்பா 2 தி ரூல்' படம் உருவாகியுள்ளது. புஷ்பா -2 படத்தில் நடிகை ஸ்ரீலீலா நடனமாடியுள்ளார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 5-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், புஷ்பா - 2 புரமோஷனுக்காக சென்னை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராஷ்மிகாவிடம் அவரது காதல் குறித்தும் உங்களைத் திருமணம் செய்பவர் சினிமாத் துறையில் இருக்க வேண்டுமா இல்லை வேறு துறையைச் சேர்ந்தவரா? எனக் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு ராஷ்மிகா, "என் காதல் எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தானே... இந்தப் பதிலுக்காகத்தான் கேட்டீர்கள் எனத் தெரியும்" என்றார். இதைக்கேட்ட அல்லு அர்ஜுன், ஸ்ரீலீலா ஆகியோர் பலமாக கைதட்டி சிரித்தனர். . விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் சில ஆண்டுகளாகக் காதலித்து வருவதும் இருவரும் திருமணம் செய்யும் முடிவில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது
விஜய் தேவரகொண்டா கடைசியாக பிரபாஸ், தீபிகா படுகோன், கமல்ஹாசன் மற்றும் அமிதாப் பச்சன் நடித்த கல்கி 2898 ஏடி படத்தில் அர்ஜுனனாக கேமியோ ரோலில் நடித்திருந்தார். விடி12 மற்றும் விடி 14 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் சிக்கந்தர் இந்தி படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.