ஹாரர் பக்கம் திரும்பும் ராஷ்மிகா மந்தனா?
|நடிகை ராஷ்மிகா மந்தனா ஹாரர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
இந்த ஆண்டு பாலிவுட்டில் வெளியாகும் ஹாரர் படங்கள் அதிக அளவில் வசூல் செய்து வருகின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான 'ஷைத்தான்' படம் வெற்றிபெற்றது. அதனைத்தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் வெளியான ஹாரர் படமான முஞ்யாயும் வெற்றி படமாக அமைந்தது. அதேபோல, சமீபத்தில் வெளியான ஸ்ட்ரீ 2 படமும் ரூ.500 கோடி வசூலை நோக்கி முன்னேறி வருகிறது.
இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவும் ஹாரர் பக்கம் திரும்பி இருக்கிறார். ராஷ்மிகா மந்தனா, பாலிவுட்டில் ஹாரர் காமெடி கதைகளத்தில் உருவாக இருக்கும் 'வேம்பையர் ஆப் விஜயநகரம்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆயுஷ்மான் குரானா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை 'முஞ்யா' இயக்குனர் ஆதித்யா சர்போத்தர் இயக்கவுள்ளார்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளதாக கூறப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ராஷ்மிகா, அல்லு அர்ஜுனுடன் புஷ்பா 2, விக்கி கவுஷலுடன் சாவா, சல்மான் கானுடன் சிக்கந்தர், தனுஷுடன் குபேரா போன்ற படங்களில் பணியாற்றி வருகிறார்.